• Wed. Apr 24th, 2024

பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!

ByA.Tamilselvan

Mar 31, 2023

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளனர் என்று மனு அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை என்கிற காரணத்தினால் தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டது. பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகாரளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென வாபஸ் பெற்றது மாணவிகளிடையே பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நீண்டகாலமாக பணியாற்றி வருவதால் அவர்கள் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்குவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி அங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதிலளிக்காத நிலையில் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துண்புறுத்தல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்ஹா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேலும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வராததால், போலீஸ் விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மாணவிகள் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளித்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *