பல்லடம் அருகே பால சமுத்திரம், பெரும்பாளி ஆகிய இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போன வழக்கு!ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாலசமுத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் மற்றும் சசிகுமார் ஆகியோரது பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு வீட்டு பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து தப்பியது. அதே போல் பெரும்பாளி பகுதியிலும் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி வீட்டிலும் புகுந்த கும்பல் அங்கிருந்து ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்லடம் திருப்பூர் சாலை சின்னக்கரை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மூன்று நபர்களைப் பிடித்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதேபோல் பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இரண்டு ஆசாமிகளை பிடித்து பல்லடம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் போலீசாரிடம் பிடிபட்ட ஐந்து நபர்களுக்கும் பூட்டிய வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து ஒடிசா மாநிலம் மதுசூதனன் மொகந்தி 34,கோவை பீளமேடு பாலசுப்பிரமணி 26,அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 25,விஷ்ணு 30, கோவை வீரபாண்டி பிரிவு வினோத் குமார் 33 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த பல்லடம் போலீசார் அவர்களிடம் இருந்து 17 சவரன் தங்க நகைகள் ரூ.30,000 த்தை மீட்டனர் .மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.