சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1988-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மேலும் அடிக்கடி மேற்கூரை இடிந்து விழுவதால் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குறைதீர் கூட்டம் நடக்கும் அறைக்கு முன்பாக இருந்த மேற்கூரை, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மேற்கூரை, தேர்தல் பிரிவு, வளர்ச்சிப்பிரிவு, கல்வித்துறை அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்தன. ஆனால் அவை முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில் மனுக்கள் பதிவு செய்யும் இடம், ஆதார் மையம், ‘இ-சேவை’ மையம் உள்ள கட்டிட நுழைவாயில் மேற்கூரை திடீரென இடிந்து பலத்த சத்தத்துடன் விழுந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் அலறியபடி ஓடினர். ஆனால் யாருக்கும் காயமில்லை. இனி வருங்காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடிந்த பகுதிகளை முழுமையாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.