


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்ய உரிமை பற்றி அபுதாபியில் புதிய தனிநபர் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி)யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கும் திருத்தப்பட்ட ஃபெடரல் தனிநபர் சட்டமானது (Personal Status Law) அமலுக்கு வந்துள்ளது. திருமணம், விவாகரத்து, குழந்தைகளின் காப்பாளர் வயது போன்ற விஷயங்களில் ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.


இந்த புதிய சட்டத்தின்படி, வயது வந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நபரை திருமணம் செய்வதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தாலும், நீதிமன்றத்தின் மூலம் அதை சாத்தியமாக்க முடியும். வெளிநாட்டு முஸ்லீம் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் தேசிய சட்டப்படி பாதுகாவலர் தேவையில்லை என்றால், பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
அதே நேரத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே 30 வயதுக்கு மேல் வித்தியாசம் இருந்தால், நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.
நிச்சயதார்த்தம் திருமணமல்ல, வெறும் வேண்டுகோள்:
திருமண நிச்சயமானது ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கான ஆணின் வேண்டுகோள் மட்டுமே என்றும், அதை திருமணமாகக் கருத முடியாது என்றும் இந்த சட்டம் தெளிவுபடுத்துகிறது. திருமணத்திற்கு இறுதி வடிவம் கொடுத்த பிறகு யாராவது பின்வாங்கினால், அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுகளை திரும்பப் பெறவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. 25,000 திர்ஹம்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிசுகளை அவற்றின் மதிப்பின் அடிப்படையில் திரும்பப் பெறலாம்.
யார் பாதுகாவலர்? குழந்தைகள் தீர்மானிப்பார்கள்:
விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்பாளர் வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு சிறுவர்களுக்கு 11 ஆகவும், சிறுமிகளுக்கு 15 ஆகவும் இருந்தது. ஆனால் 15 வயதை அடைந்தவுடன், எந்த பெற்றோருடன் வாழ வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தைக்கு இருக்கும். 18 வயதை அடைந்தவர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை தாங்களே வைத்திருக்கலாம்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
பெற்றோரைப் புறக்கணித்தால் நடவடிக்கை:
பெற்றோரைப் புறக்கணித்தல், மோசமாக நடத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், கைவிடுதல் மற்றும் தேவைப்படும்போது நிதி உதவி வழங்காதது போன்ற செயல்களுக்கு தனிநபர் சட்டத்தில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வயது குறைந்தவர்களுடன் அனுமதியின்றி பயணம் செய்வது, அவர்களின் சொத்துக்களை அபகரிப்பது மற்றும் பரம்பரைச் சொத்துக்களை வீணாக்குவது போன்ற சட்ட மீறல்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. சிறைத்தண்டனை மற்றும் 5,000 திர்ஹம் முதல் 1 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும். குடும்ப உறவுகள், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்துவதும், உரிமைகளைப் பாதுகாப்பதும் இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும்.

