• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நேபாள கொடூர வெள்ளம்: சென்னைக்கும் ஆபத்தா?

ByAra

Aug 29, 2026

நேபாளத்தில் வெள்ளம் என்ற செய்தி சாதாரணமானதுதான் என முதலில் ஆகஸ்டு 26 ஆம் தேதி புதன் கிழமை பலரும் கடந்து சென்ற நிலையில்… நேபாள வெள்ளத்தின் கொடூரக் காட்சிகள் வெளியானதும்தான் உலகத்தையே அதிர வைக்கும் வகையில் அது மாறியது.

ஆகஸ்டு 26 காலை புதன் கிழமை நேபாள நேரப்படி காலை 8.37 மணிக்கு காலை பனி மற்றும் பாறைகளின் நிலச்சரிவின் விளைவாக, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே ஓடும் போட்கோஷி என்றும் அழைக்கப்படும் திரிசூலி ஆற்றின் கரையில் மண், நீர் மற்றும் குப்பைகள் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 341 பேர் உட்பட 403 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். திபெத்தில், குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 265 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டுவை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையத்தின் வல்லுநர்கள் கூறுகையில், “திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் அரை மணி நேரத்தில் ஒன்பது மீட்டர் வரை உயர்ந்தது. போட்கோஷியின் துணை நதியான லெண்டே கோலா நதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஆகஸ்டு 26 மாலையில் இருந்தே செய்திகள் பரவியதால்,வெள்ளத்தின் அதிர்ச்சி தமிழ்நாட்டில் சோகமாக மாறியது.

“லெண்டா கோலா நதியில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இந்த முறை நேபாளப் பகுதியில் உள்ள பனிப்பாறையில் இருந்து பனிப்பாறை பனிச்சரிவு காரணமாக, கீழ்நோக்கி திடீரென எழுச்சியை வெளியிட்டது” என்று காலநிலை ஆராய்ச்சி குழுவின் பேரழிவு ஆபத்து குறைப்பு நிபுணர் சாஸ்வதா சன்யால் கூறினார்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பனிப்பாறையிலிருந்து (glacier) ஏற்பட்ட பனிச்சரிவே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கனால் புதன்கிழமையன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கூறினார். இருப்பினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்தது. ஆரம்பத்தில் இது ரிக்டர் அளவில் 4.4 தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலதிக ஆய்வில் அந்த “நில அதிர்வு நிகழ்வானது உண்மையில் ஒரு பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குப்பைகள் கலந்த பாய்வு (debris flow) என்றும், அதுவே கீழ்நோக்கிப் பாயும் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது” என்றும், “எந்த நிலநடுக்கமும் ஏற்படவில்லை” என்றும் தெரியவந்தது. புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8:37 மணிக்கு நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் நிகழ்ந்த இந்த பனிப்பாறை சரிவு, ரிக்டர் அளவில் 5.2 தீவிரத்தன்மை கொண்ட நில அதிர்வு நிகழ்வாகப் பதிவாகியிருந்ததாக USGS குறிப்பிட்டது.

கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவடிவவியல் நிபுணர் (geomorphologist) அசோசியேட் பேராசிரியர் டேனியல் சுகரின் கூற்றுப்படி, ஆரம்பக்கட்ட செயற்கைக்கோள் ஆய்வில் 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பனித்துண்டு ஒன்று “செங்குத்தாக சுமார் 1.2 கிலோமீட்டர் தூரம் சரிந்து விழுந்தது” தெரியவந்துள்ளது.

“பிளானட் லேப்ஸ் (Planet Labs) நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களில் நான் காண்பது என்னவென்றால், சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து, சுமார் 1,200 மீட்டர் கீழே உள்ள பள்ளத்தாக்கின் தரையில் மோதியுள்ளது,” என்று அவர் ப்ளூஸ்கை (Bluesky) தளத்தில் எழுதியுள்ளார்.

பேரழிவு நிகழ்வதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் அதிக அளவிலான பனி உருகியிருப்பதையும் அந்தச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக அவர் கூறினார். “பள்ளத்தாக்கில் உள்ள சில பனிப்பாறைகள் நேற்று பனியால் மூடப்பட்டிருந்தன, ஆனால் இன்று அவை பெரும்பாலும் வெறும் பனிக்கட்டியாக (bare ice) உள்ளன. அப்பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருந்திருக்கலாம். மேலும் முக்கியமாக மலைப் பகுதிகளில் அதிகரித்த கட்டுமானப் பணிகளும் இதற்கொரு காரணமாக இருக்கலாம் என்று சுகர் கூறினார்.

இதற்கிடையே நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்கும் வகையில், புதுடெல்லி தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் தலைமையிலான குழுவை நேபாளத்துக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆகஸ்டு 27 ஆம் தேதி அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று, நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நேபாள நாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்றுள்ளனர். அதில் முதல் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும் இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போனதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும், இப்பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை, நேபாள நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம், புதுடெல்லியிலுள்ள தமிழக இல்ல அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்களின் (Travel Agencies) உதவியுடன் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் விஜய், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில், புதுடெல்லி தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்திட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவும், மேலும் தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையினைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் மற்றும் அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ. சதீஸ் ஆகியோர் புதுடெல்லியிலுள்ள தமிழக இல்லத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.

அதோடு, நேபாளத்திலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் மூலம் வழங்கிடவும், அவர்களைப் பத்திரமாக தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் குடும்பத்தினர் கடும் மனப் போராட்டத்தில் தவித்துக்கொண்டுள்ளனர். நேபாளத்தில் இயற்கை நடத்திய கொடூரம் உலகையே கவனிக்க வைத்துள்ளது.,

இதற்கிடையே இயற்கையுடன் விளையாடக் கூடாது என்ற பாடத்தை இன்னும் அழுத்தமாக நம் நெஞ்சத்தில் எழுத இந்த சம்பவம் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது எல்.நினோ என்ற கடும் காலநிலை ,மாற்றம் நடந்து வரும் நிலையில்… வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையின் போது, ஒரே கட்டமாக 50 செ.மீ-க்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என்று சென்னை மேயர் ஆர். பிரியா எச்சரித்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“எல் நினோ (El Niño) விளைவு காரணமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். தற்போது சென்னையில் வெப்பத்தின் அளவும் அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு 50 செ.மீ-க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே கட்டமாக இவ்வளவு மழை பெய்தால், அது சென்னையைப் பாதிக்கும். 2023-ல் வீச்சங் (Michaung) புயலின் போது நகரில் 45 செ.மீ வரை மழை பெய்தது. எனவே, அதே அளவிலான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அல்லது, மழையே பெய்யாமலும் போகலாம்; அப்போது நாம் வறட்சியைச் சந்திக்க நேரிடும். பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டத்தில் பங்கேற்ற நிபுணர்களின் கருத்துப்படி, இந்த இரண்டு சூழல்களும் சாத்தியமே” என்று மேயர் பிரியா கடந்த ஆகஸ்டு முதல் வாரம் எச்சரித்தார்.

நேபாள இயற்கை சீற்றத்தில் இருந்து சென்னையும் முன்கூட்டியே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Ara