



பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 3 வெவ்வேறு சம்பவங்களில் 8 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் ₹1200 டிக்கெட்டுகளை ₹7000க்கு விற்றதாக ஸ்டேடியத்தின் கேன்டீன் ஊழியர் சண்டிகரைச் சேர்ந்த மனோஜ் காண்டே (28) மற்றும் அவரது உதவியாளர் சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பாட்டனர். கேன்டீன் மேலாளர் சிவக்குமார் மற்றும் மற்றொரு ஊழியர் நாகராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், தனியார் நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை ₹5000 முதல் ₹10000 வரை விற்றதாக செரியன் என்பவரும் அவரது 4 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். அது போல்
‘துபாய் எக்ஸ்சேஞ்ச்’ என்ற பெயரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் யாஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஜீவன் பீமா நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ₹5 லட்சம் ரொக்கம், மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

