



தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் அம்மனின் உத்தரவுக்குப்பின் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் உள்ளது அருள்மிகு கண்டியம்மன் கோயில். இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அம்மனிடம் உத்தரவு கேட்டு உத்தரவின் பேரில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடத்துவதற்கு அம்மன் உத்தரவு தராததால் திருவிழா கொண்டாடபடாமல் விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அம்மன் உத்தரவு வழங்கியதை அடுத்து திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவில் விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பொங்கல் பானைகளை வைத்து ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து உத்தரவு வழங்கிய அம்மனுக்கு நன்றியை செலுத்தினார்கள்.

இந்த விழாவில் இதன் தொடர்ச்சியாக இன்று முளைப்பாரி ஊர்வலமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டும் இன்றி கோவை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.

