


விவசாய உபகரண மானிய தொகைக்கான செக் வழங்க ரூ 20,000 லஞ்சம் வாங்கிய தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய இராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2015ல் தேனியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்திய சுதர்சன் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை நிறுவனத்தின் மூலம் விவசாய பயனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களுக்கான மானிய தொகையினை காசோலை மூலம் விடுவிப்பதற்கு பரிந்துரை செய்ய ரூ 25,000/- லஞ்சமாக கேட்டுள்ளார்.


இதற்கு ரவிச்சந்திரன் சம்மதிக்காததால், பின்னர் அதை குறைத்து ரூ.20,000 /- லஞ்சமாக கேட்டுள்ளார், லஞ்சம் கொடுத்து மானிய தொகைக்கான காசோலையை பெற விரும்பாத ரவிச்சந்திரன் இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 09.03.2015 ஆம் தேதி புகாதாரர் ரவிச்சந்திரன் இருந்து ரூ.20,000/- பணத்தை உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
பின்னர் அந்த வழக்கு தேனி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக துணை சட்ட ஆலோசகர் கவிதா அவர்கள் ஆஜராகிய இந்த வழக்கில் நேற்று ராதாகிருஷ்ணன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், அபராதம் ரூ 1,000/- விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் அவர்கள் தீர்ப்பளித்தார்.

