• Sat. Sep 30th, 2023

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…

Byகுமார்

Oct 29, 2021

மதுரையில் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவிற்கு நேரில் வந்து தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தினார். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன், மூச்சுத்திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உள்ளிட்டோரின் நன்மதிப்பிற்குரியவர். நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர். கடின உழைப்பாளி, சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும் மேடை கலைவாணர் என்ற பெயரையும் பெற்றவர்.

நன்மாறனின் மறைவு அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், எளிமை பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர். மேடை கலைவாணர் எனப் பெயர் பெற்ற மதுரையின் மாணிக்கம். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நன்மாறனின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *