தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் சோக விபத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 25 வயதான அன்பரசு, தாம்பரம் அருகிலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்தார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் முடிச்சூரிலிருந்து தாம்பரம் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது பழைய பெருங்களத்தூர் அம்பேத்கர் சிலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பள்ளி வேன் அவரது வாகனத்தை மோதி சுமார் 20 அடி தூரம் இழுத்துச் சென்று இதில் அவரது தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அன்பரசுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்குக் காரணமான பள்ளி வேன் ஓட்டுநரான தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நாகேந்திரனை போலீசார் கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான முடிச்சூர் சாலையில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்த காட்சிகள் விபத்தின் கொடூரத்தைக் காட்டுவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிவேக ஓட்டமும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய உயிரிழப்புக்கு காரணமான தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் நாகேந்திரனுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.




