• Sat. Apr 20th, 2024

டெல்லியில் அடுத்த வாரம் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஆனு) கணித்திருப்பதால், டெல்லியை மீண்டும் மற்றொரு கடுமையான வெப்ப அலை தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Byவிஷா

Apr 23, 2022

கடந்த வாரம் பல நாட்கள் டெல்லியில் வெப்ப அலை சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ்க்கு கீழே வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில் அடுத்த ஐந்து நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வியாழக்கிழமைக்குள் டெல்லியின் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் எட்டு வெப்ப அலை நாட்கள் பதிவாகியுள்ளது. இது 2010-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 11 வெப்ப அலை நாட்களுக்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ{க்கு அதிகமாகவோ அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும்போது வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. மேலும், இயல்பான வெப்பநிலையில் இருந்து 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் கடுமையான வெப்ப அலை என்று அறிவிக்கப்படும்.

ஏப்ரல் 21, 2017 அன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. அதுபோல டெல்லியின் மிக அதிகபட்ச வெப்பநிலை என்றால் அது ஏப்ரல் 29, 1941 அன்று பதிவான 45.6 டிகிரி செல்சியஸ் ஆகும்.
வடமேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் இந்த கோடைக் காலத்தில் அதிக தீவிரமான மற்றும் அடிக்கடி வெப்ப அலை நிகழ்வுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *