


‘கெட் அவுட் மோடி’ ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த நிலையில், ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது
மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் தான், நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக, அதிமுக, சிபிஐ உள்பட பல கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
அப்போது இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , “தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்தினார்கள். மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால் ‘கோ பேக் மோடி’ என்று சொல்வதற்கு பதிலாக ‘கெட் அவுட் மோடி’ என்று கூறி துரத்துவார்கள் என்று பேசினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நீ சரியான ஆளாக இருந்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்லு, பார்க்கலாம்’’ என்று சவால் விட்டார். இந்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில் ‘கெட் அவுட் மோடி’ ( #GetOutModi ) என்ற ஹேஸ்டேக் நேற்று டிரெண்ட்டானது. இதனால் ‘கெட் அவுட் மோடி’ ( #GetOutModi )என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் டிரெண்டானது.
இதனால் கொதித்து போன பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நாளை (பிப்ரவரி 21) காலை நான் கெட் அவுட் ஸ்டாலின் (#GetoutStalin) என ட்வீட் பதிவிடப் போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள் என திமுகவினருக்கு அண்ணாமலை சவால் விட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் (#GetoutStalin) என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளார். அந்த வாசகம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

