• Sat. Apr 20th, 2024

பேரவையிலிருந்து பாதியில் வெளியேறினார் ஆளுநர்

ByA.Tamilselvan

Jan 9, 2023

தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை முதலமைச்சர் கண்டனம் சட்டசபையிலிருந்து வெளியேறிய ஆளுநர்
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற வளாகத்தில் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி கவர்னர் ஆர்.என்.ரவி பேசத்தொடங்கினார். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கவர்னர் ரவியின் உரையை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர், அமளியில் ஈடுபட்டனர். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின் தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி சட்டப்பேரவையில் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இந்நிலையில், தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திராவிட மாடல் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தார். அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு. உரையில் இடம் பெறாமல் ஆளுநர் சொந்தமாக சேர்த்து கொண்டவை அவை குறிப்பில் இடம் பெறாது என முதல்வர் கூறினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையில் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, பேரவையிலிருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். முறைப்படி சட்டப்பேரவைக்கூட்டம் முடியும் முன்னரே அவையிலிருந்து ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *