• Fri. Mar 29th, 2024

தேனி அருகே மலை மாடுகள் வளர்ப்பவரை வனத்துறை அதிகாரி தாக்கியதால் வனசரகர் அலுவலகம் முற்றுகை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெமினி. இவருக்குச் சொந்தமான மலை மாடுகளை, கருப்பையா என்பவர் மேய்ச்சலுக்கு அரண்மனை காடு எனும் பட்டா இடத்திற்கு இன்று காலையில் வழக்கம் போல அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற மலை மாடுகளை  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விட்டதாகக் கூறி கருப்பையா மீது நடவடிக்கை எடுப்பதற்கு சின்னமனூர் வனசரக அலுவலகத்திற்கு வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர். மேலும் மாட்டின் உரிமையாளரான ஜெமினிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


 இதையடுத்து மேகமலை சாலையில் உள்ள சின்னமனூர் வன சரக அலுவலகத்திற்கு வந்த ஜெமினி, அங்கிருந்த வனத்துறையினரிடம் கருப்பையாவை விடுவிக்கும் படி கூறியுள்ளார். மேலும் பட்டா நிலத்தில் மாடு மேய்ப்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனக் கூறியதில் வனத்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வனத்துறை அதிகாரி செல்வம் என்பவர் ஜெமினியை தாக்கியதாக கூறி, அவரது உறவினர்கள், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் என ஏராளமானோர் வன சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் காவல் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்கவில்லை. மலை மாடுகள் வளர்ப்பவரை தரக்குறைவாக பேசி, தாக்கிய சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *