• Thu. Mar 28th, 2024

மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு!!

பல்லடம் வாவிபாளையம் அருகே பிஏபி வாய்க்கால் ஓர விவசாயக் கிணறுகளில் மின்னிணைப்பு துண்டிக்க வந்த மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்ற அதிகாரிகள்!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் அருகே கோவை மாவட்ட எல்லை பகுதியான வரபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு அப்பகுதி வழியே செல்லும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் தண்ணீர் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடைமடை வரை பிஏபி வாய்க்காலில் தண்ணீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் கேத்தனூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய நாராயணன் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் இன்று அப்பகுதியில் உள்ள சில மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இரண்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.


இது பற்றி தகவல் அறிந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டும் சிறை பிடித்தும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மின்னிணைப்பை துண்டிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்துக் கொள்ளுமாறு கூறி அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியை நிறுத்தி துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இயற்கை ஆதாரமான மழை நீரை கருத்தில் கொண்டே பல்வேறு பயிர் சாகுபடிகளை இதுவரை செய்து வருவதாகவும் இதுபோன்ற மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை மின்வாரி அதிகாரிகள் கைவிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் அதனை நம்பி வாழ்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *