தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில், தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, முதற்கட்டமாக தலைமைச்செயலகத்தில் அதற்கான தனி மின்பலகையில் திருக்குறள் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் இடம் பெற வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, சட்டப்பேரவைச் செயலகம், அரசுத்துறை அலுவலகங்களில் கரும்பலகையில் மட்டுமே திருக்குறளும், அதற்கான விளக்கமும் இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில், கரும்பலகைக்குப் பதிலாக மின்பலகை பொருத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் நான்காவது நுழைவு வாயிலில் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திருக்குறளும், அதன் பொருளும் இடம் பெற்றுள்ளது. இத்துடன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் அதற்கான தமிழ் அர்த்தமும் மின்பலகையில் இடம் பெற்றிருக்கிறது. மிகப்பெரிய ரயில் நிலையங்களில் இடம் பெற்றிருப்பது போன்று பெரிய பலகையில் டிஜிட்டல் வடிவில் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.