இந்தியாவில் பெரும்பாலான நதிகளில் நகரங்களின் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை கலந்து அசுத்தமாக்குவது என்பது தொடர் கதையாகி வருகிறது. நதிகளை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேகாலயாவில் உள்ள ஒரு நதியின் தூய்மையை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை ஜல் சக்தி அமைச்சகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி இடம்பெற்றுள்ளது. தங்கள் நதிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக மேகாலயா மாநில மக்களுக்கு அமைச்சகம் நன்றி தெரிவித்தது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இந்த உம்ங்கோட் நதி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்று ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த ட்விட்டில், ‘உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள உம்ங்கோட் நதி. படகு காற்றில் மிதப்பது போல் தெரிகிறது; தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது. நமது நதிகள் அனைத்தும் இதேபோன்று சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு நன்றி’ என ஜல் சக்தி அமைச்சகம் கூறி உள்ளது.
இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நேற்று காலை இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 19000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 3000க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது.