• Fri. Mar 29th, 2024

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது…

Byகுமார்

Nov 17, 2021

மதுரையில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கைது – பரபரப்பு – 710கல்லூரி மாணவர்கள் மீது 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த கோரி கடந்த இரு தினங்களாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதிலும் உள்ள கல்லூரிகள் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் மாணவர்களை விரட்டி கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சொக்கிகுளம் மற்றும் கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரி முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து மாநகரில் கவால்துறையினர் கல்லூரி மாணவர்களை போராட்டத்தை கட்டுப்படுத்த ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலைகழக கல்லூரி, மதுரா கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 710கல்லூரி மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேர்த்தல், தவறான கருத்துகளை பதிவிடும் முயற்சி என 3பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம், தல்லாகுளம் ஆகிய காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மீதும் தனிதனியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் தமுக்கம் மைதானம், நரிமேடு, செல்லூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *