• Mon. Dec 9th, 2024

நில அதிர்வுக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம்-நாமக்கல் ஆட்சியர்

Byகாயத்ரி

Dec 14, 2021

பயங்கர சத்தத்துக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம் என்று நில அதிர்வு குறித்து நாமக்கல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூரில் இன்று காலை 11:30 மணியளவில் திடீரென்று அதிபயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதை தொடர்ந்து வெங்கமேடு, கரூர், தான்தோன்றி மலை, கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்து வைக்கப்பட்டிருந்த வீடுகளின் கதவுகள் தானாக மூடியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

கரூர் நகர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடிகள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஒரு நொடி நில அதிர்வு உணரப்பட்டதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதேபோல் நாமக்கல் சுற்றுவட்டாரங்களிலும் திடீரென வெடிச்சத்தம் கேட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.சேந்தமங்கலம், மோகளூர், ஆவேளூர், புதுசத்திரம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, பொதுவாக தஞ்சையில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து அடிக்கடி கோவை சூலூர் விமான பயிற்சி தளத்திற்கு சூப்பர்சானிக் ஜெட் அதிவேக விமானம் செல்வது வழக்கம் என்றும், அப்போது அதிலிருந்து வெளிவரும் ஒருவிதமான சத்தம் நிலப்பகுதியில் இதுபோன்ற அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

நில அதிர்வு குறித்து விசாரணை நடத்தப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார். அதேநேரம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், அந்த பயங்கர சத்தத்துக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.