சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கால்வாயில் விழுந்த காரில் சிக்கிய 5 பேரை, துணிச்சலுடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்து. மழையின் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றிலிருந்து மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் மதுரை, ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள கால்வாயில் வெள்ளம் பாய்கிறது . இந்நிலையில் அந்த வழியாக நேற்று மாலை லாடனேந்தல் – திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் இன்னோவா கார் ஒன்று மானாமதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் சென்ற கார், எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டினை இழந்து கால்வாயில் விழுந்தது.
கால்வாயில் 5 அடி ஆழம் இருந்ததாலும், தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் காருக்குள் இருந்த இரண்டு குழந்தைகள், முதியவர் உட்பட 5 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதனை அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் கவனித்த நிலையில், உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த 5 பேரையும் ஒவ்வொருவராக மீட்டார்.
முத்துகிருஷ்ணனின் துணிச்சலான இந்த நடவடிக்கையால் 5 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனுடன் காரில் வந்த சிறுமி செல்போனில் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து ஏராளமானோர் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.