ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூடுதலாக 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யும் கணக்கு கண்காணிக்கப்படுவதாகவும், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள 13 புகார்களுக்கு பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வாக்காளர்கள் குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 547 வழக்குகள் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 64 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 430 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது என தெரிவித்துள்ள சத்ய பிரதா சாகு, வாக்குச் சாவடியில் ஆயிரத்து 206 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.