• Wed. Apr 24th, 2024

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் அ.தி.மு.க., தி.மு.க இடையே சலசலப்பு..!

பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டைதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அர்த்தநாரிபாளையம் ஊராட்சி தி.மு.க. வைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர் இந்த ஊராட்சியின் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சி வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் உள்ளது சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி.


அர்த்தநாரிபாளையம் ஊராட்சியில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் குலோத்துங்கன் வருமுன்னரே குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்ததாக கூறப்படுகிறது.


அதன் பிறகு அங்கு வந்த ஊராட்சி தலைவர் குலோத்துங்கன், மக்கள் பிரதிநிதி ஆகிய நான் வருவதற்குள் முகாமை எப்படி துவக்கலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் முன்னதாக வந்து சென்ற அ.தி.மு.க. வினர் அங்கிருந்த கலைஞர் மற்றும் முதல்வரின் விளம்பர பலகைகளை அகற்றியதாகவும், ஊராட்சி தலைவர் குலோத்துங்கன் ஆழியார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.


அதேசமயம் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் குலோத்துங்கன் மருத்துவ முகாம் நடைபெறாமல் தடுத்து நிறுத்திவிட்டார் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *