• Tue. Dec 10th, 2024

பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவியின் உடல்கள் இறுதி ஊர்வலம் துவங்கியது

Byகாயத்ரி

Dec 10, 2021

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வந்தனர்.இந்நிலையில், தற்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள பிரார் மயானத்தில் தகனம் செய்ய இருவரின் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிபின் ராவத்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலத்தை காண டெல்லியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இறுதி ஊர்வலம் சென்ற ராணுவ கவச வாகனத்தின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் தேசிய கொடியுடன் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வாகனம் கண்டோன்ட்மென்ட் சாலையின் ஒருபுறம் செல்ல மறுபுறம் வாகனங்கள் நகராமல் முடங்கின.

பிபின் ராவத்தின் உடல் எடுத்து செல்லப்படும் ராணுவ வாகனம் பிற்பகல் 3:30 மணிக்கு பிரார் சதுக்கம் சென்றடைய உள்ளது. பிரார் சதுக்கத்தில் 17 குண்டுகள் முழங்க பிபின் ராவத்துக்கு ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். முப்படையை சேர்ந்த 99 அதிகாரிகள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.