மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெற்றுள்ளார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது அமோக வெற்றிப்பெற்று அம்மாநில முதல்வராக தொடர்கிறார்.
இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை விட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில் மம்தா 84,709 வாக்குகளும், பிரியங்கா 26,320 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மம்தா, “பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்றபெற வைத்த மக்களுக்கும், நான் வெற்றிபெற உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி, நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி. பவானிப்பூர் மட்டுமின்றி சம்சர்கன்ஞ் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும்” என தெரிவித்தார்.
மம்தாவின் வெற்றிக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தனது பதிவில் அவர் “பவானிபூர் இடைத்தேர்தலில் உங்களின் அபார வெற்றிக்கு வாழ்த்துக்கள் மம்தா. மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார். மேலும் பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்