சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) பகுதிக்கு வாரத்திற்கு இருமுறை இயங்கும் ரயிலினை (வண்டி எண்: 22647 / 22648) நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது.

இதனால் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் இந்த ரயில் பயணத்திற்கு பயணிகளுக்கு 13 மணி நேரம் கூடுதலாக பயண நேரம் ஏற்படுகிறது. இதுமட்டுமன்றி டிக்கெட்டுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது. கூடுதல் நேரம் ஆவதால் அலுவலகத்திற்கு செல்லும் பயணிகள் கூடுதலாக விடுப்பு எடுக்கின்ற சூழ்நிலையும் ஏற்படுகிறது.
மேலும் 22619 / 22620 என்ற வண்டி எண் கொண்ட ரயில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி வரை வாராந்திர ஒரு முறை இயக்கப்படும் அதிவிரைவு ரயிலினை தினசரி ரயிலாக இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் மிக தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணாளிகளுக்கு மேற்கூறியபடியே கூடுதல் நேர பயணமும், கூடுதல் டிக்கட் கட்டண செலவும் ஏற்படுகிறது.
இதனை தவிர்ப்பதற்கு கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிற்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். மேலும் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் பயணிகளுக்கு பயண நேரம் 12 மணி நேரம் குறைவதோடு, பயண செலவும் கணிசமாக குறைகிறது.

அது மட்டுமின்றி மேற்கூறியபடி மதுரை வழியாக அதிவிரைவு ரயிலினை இயக்கும் போது ரயில்வே துறைக்கு அதிகளவு பராமரிப்பு செலவு மற்றும் செயல்பாட்டு செலவு கணிசமாக குறைகிறது. இதனை செயல்படுத்தும் போது தமிழகத்தில் உள்ள 13 மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் முதன் முறையாக இதன் மூலம் பயன் பெறுவார்கள். மேலும் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை ரயில் பாதையானது இரட்டை ரயில் பாதையானதால், இந்தியாவிலேயே அதிகளவு வருவாயை ஈட்டி தருகின்ற ரயில் பாதையாகவும் இவை அமைந்துள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள வண்டி எண்: 22647 / 22648 கொண்ட ரயில் திருநெல்வேலியிலிருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக கோர்பா செல்வதற்கு 49 மணி நேரம் ஆகிறது. அதே நேரத்தில் அதாவது, திருநெல்வேலியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக கோர்வா செல்வதற்கு 39 மணி நேரம் தான் ஆகிறது.
இதைப்போன்று திட்டமிடப்பட்டுள்ள வண்டி எண்: 22619 / 22620 கொண்ட ரயில் திருநெல்வேலியிலிருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக பிலாஸ்பூர் செல்வதற்கு 45 மணி நேரம் ஆகிறது. அதே நேரத்தில் அதாவது, திருநெல்வேலியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக கோர்பா செல்வதற்கு 33 மணி நேரம் தான் ஆகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட இரு ரயில்களையும் திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக இயக்குவதற்கு பதிலாக, கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் 2 அதிவிரைவு ரயில்களை நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக செல்வதற்கு இயக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜீ அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கும் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார்.




