



மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசு மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டும். எனவே இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த வகுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசின் வக்பு மசோதா சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி, தமிழக முழுக்க இன்று தவெக கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் வக்பு மசோதா சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில் இன்று கிழக்கு கடற்கரை சாலை தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகம் அமைந்திருக்கின்ற பகுதிற்கு அருகில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள், இஸ்லாமிய பெண்கள் என 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது வக்ஃபு மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போதே, திடீரென்று தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் தலைமையிலான கட்சியினர் திடீரென்று சாலையில் அமர முற்பட்டனர்.
அப்பொழுது கானத்தூர் காவல் நிலைய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்ற போது, சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் அவர்களை சாலைக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த பனையூர் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் கூறுகையில்..,
வக்பு சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும், இந்த சட்ட திருத்தத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இஸ்லாமியர்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எப்போதும் தமிழக வெற்றிக் கழகமும், தலைவர் விஜயும் உறுதுணையாக இருப்பார்கள்.
மற்ற கட்சியை போல நாங்களும் வந்தோம், சென்றோம் என இருக்க மாட்டோம். தவெக எப்போதும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்களுக்கு வகுப்பு திருத்த சட்டம் எதற்கு என்று தெரியும். அவர்களின் சொத்துக்களில் மற்றவர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். பாஜகவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்ய வேண்டும் என்றே இதை செய்கிறார்கள்,
மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசு மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்ய வேண்டும். எனவே இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த வகுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், இவ்வாறு கூறினார்

