சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் 58 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஐஐடி நிர்வாகம் அந்த கடிதத்தில் தமிழக அரசு தான் 1959 ஆம் ஆண்டு ஐஐடி நிர்வாகத்திற்கு கல்லூரி அமைப்பதற்கு 250 ஹெக்டேர் இடம் வழங்கியது. அது முதல் ஐஐடிக்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது. ஐஐடியில்அமையவுள்ள கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் அமைக்க ரூ 10 கோடி நிதியுதவி கேட்டு உயர்கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடைய செய்துள்ளது
. தமிழகத்தில் நடக்கும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம் பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடலை பாடும் போது மாற்றுத் திறனாளிகள் தவிரஅனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.. மேலும் சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்தது பல கண்டணங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின் போது தேசிய கீதத்துடன் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக விரைவில் சென்னை ஐஐடிக்கு அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.