பாத்திரிக்கை துறையை சார்ந்த அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் தலைவர் பா.சிவகுமார், பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல், துணைத்தலைவர் சி.பெஞ்சமின், பொருளாளர் பி.நிலாவேந்தன், இணைச்செயலாளர் ஆர்.ரங்கபாஷ்யம், ஜெ.ஆர். சுரேஷ் மற்றும் தா.பாக்கியராஜ், துணைச்செயலாளர் ஏ.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


அந்த கோரிக்கையில், “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் பருவ கால பத்திரிக்கையாளர்களையும் வருமான வரம்பில் எந்த நிபந்தனையுமின்றி பயனாளிகளாக இணைத்தமைக்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் பலனே மகேசன் பணி என பணியாற்றி வரும் தங்களின் ஆட்சி மேலும் பல சாதனைகளை அடைய தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி RNI-ல் பதிவு பெற்று தொடர்ந்து வெளிவரும் நாளிதழ் மற்றும் பருவ இதழ்களில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கை துறை சார்ந்த பத்திரிக்கையாளர்கள், மாவட்டம் மற்றும் தாலுக்கா அளவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் என பத்திரிக்கை துறையில் உள்ள அனைவருக்கும் பயன்படுகிற வகையில் விரிவுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .
