• Thu. Dec 12th, 2024

பெண்கள் நடிக்க தலிபான்கள் தடை

Byமதி

Nov 23, 2021

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.

‘ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது. அதாவது திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பெண் கலைஞர்கள் இருக்கக்கூடாது.

அதேபோல் ஆண் நடிகர்களும் நிர்வாணமாக இருக்கும் வகையில் காட்சிகள் எடுக்கக்கூடாது. ஆண் கலைஞர்களின் மார்பு முதல் முழங்கால் வரை வெளியில் தெரியக்கூடாது. செய்தி சேனலில் வரும் பெண் பத்திரிகையாளர்கள் ‘ஹிஜாப்’ துணியால் தலைமுடி தெரியாத அளவிற்கு மூடிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் வகையிலான திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது.

இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் ஆப்கனின் மதிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.