நீடித்த நிலையான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் இலக்கு என காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
.பஞ்சாயத்துராஜ் தினமான இன்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் மைக்கை கொடுத்து அவர்களது கோரிக்கைகளையும், குறைகளையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது நியாய விலை கடைகளில் அரிசி மோசமாக போடப்படுவதாக ஒருவர் புகாரளித்தார். இதேபோல் துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கை பொதுமக்கள் எழுப்பினர் .முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை கொடுத்தார்.
மேலும் அவர் பேசும் போது -உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வு படியை 5% முதல் 10% வரை அரசு உயர்த்தியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகம் முழுவதும் ஊராட்சிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
அதேபோல் ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் முதலில் ஊராட்சிகள் மேம்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். நீடித்த நிலையான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் இலக்கு என்றும் திமுக ஆட்சி அமைந்த பிறகே முறைப்படி உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே மூன்று நாட்களுக்கு முன்னர் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 110 விதியின் கீழ் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அது தொடர்பாக பேசினார். உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பொறுப்புகளுக்கு வந்திருந்தாலும் கூட, எந்தவொரு பாரபட்சமும் பார்க்காமல் அரசு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
