



வத்தலகுண்டு அருகே, தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன் மாணவன் பட்டம் பெற்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, கே.சிங்காரக்கோட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்துடன், கல்லூரி மாணவன் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கே.சிங்காரகோட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளர்ச்சி குழு தலைவர் கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்று கல்லூரியில் படித்த 500 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், பி.பி.ஏ., படித்த, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், பெரும்பாறை மலை கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர பாண்டியன் என்ற மாணவன், தான் பட்டம் பெற்றபோது, அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் பட்டம் பெற்றார்.
யாரும் எதிர்பாராத வேலையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாணவன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் படத்துடன் பட்டம் பெற்ற இந்த செயல் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக அந்த மாணவனை அழைத்த கல்லூரி நிர்வாகம் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பேசும் பொருளாக ஆக வேண்டும் என்பதற்காகவும் மாணவன் செய்த இந்த செயலைக் கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

