• Thu. Apr 25th, 2024

மாணவி மரணத்தை அரசியலாக்கவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Byகாயத்ரி

Jan 25, 2022

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரதம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

உண்ணாவிரதத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பொதுசெயலாளர் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, குஷ்பு, கராத்தே தியாகராஜன், வினோஜ் செல்வம், மீனவர் அணி சதீஸ்குமார், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை கூறியதாவது:-

மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது கட்டாய மதமாற்றத்துக்கு வற்புறுத்தியதால் என்பது அந்த மாணவியின் வாக்குமூலத்திலேயே தெளிவாக தெரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை.எனவேதான் மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம். இதை நாங்கள் அரசியல் ஆக்கவில்லை. அரசிடம் இருந்து நியாயம் கிடைக்காதபோது போராடுவதை தவிர வேறு வழியில்லை.

நாங்கள் இந்த போராட்டம் வாயிலாக அரசிடம் வைப்பது 5 கோரிக்கைகள். ஒன்று லாவண்யா வழக்கை பொறுத்தவரை கட்டாய மதமாற்ற முயற்சி நடந்து இருக்கிறது. எனவே தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும். பாதிக்கப்பட்ட லாவண்யா குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைக்கவும், திசை திருப்பவும்தான் முயற்சி நடக்கிறது. எனவே சி.பி.ஐ.விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *