• Wed. Apr 24th, 2024

தமிழ் சினிமா கம்பெனி தொடங்கியுள்ள கதை வங்கி

தமிழ் சினிமா கம்பெனி’ என்ற புத்தம் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சிறந்த கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டுமே நம்பி அனைவரும் பாராட்டும்விதத்தில் கதைக்குத் தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.இந்த ‘தமிழ் சினிமா கம்பெனி’ என்னும் நிறுவனம் 6 பேரை நிர்வாகக் குழுவாகக் கொண்டு செயல்படும் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகும்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி, சேர்மனாகவும், இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், முதன்மை ஆலோசகராகவும், தயாரிப்பாளர் ஏ.கே.சுடர், முதன்மை செயல் அலுவலராகவும், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜின்னா விஜய், மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்டிரிபியூஸன் செயல் அலுவலராகவும், பாடலாசிரியர் மற்றும் திரை எழுத்தாளர் முருகன் மந்திரம், பப்ளிசிட்டி மற்றும் மீடியா ரிலேஷன்ஸ் செயல் அலுவலராகவும், மீடியா ரிலேஷன்ஸ் ஆர்க்கெஸ்ட்ரேட்டர் நிகில் முருகனை பப்ளிக் & மீடியா ரிலேஷன் எக்ஸிகியூட்டிவாகவும் கொண்டு திரைப்பட தயாரிப்புத் துறையில் களமிறங்குகிறது ‘தமிழ் சினிமா கம்பெனி’.
தமிழ் சினிமா கம்பெனி’ தாங்கள் தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்கள்.
அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு இதுவரையிலும் மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகத் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். அவ்வாறு கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்ததால், அந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழ் சினிமா கம்பெனி நிறுவனமே தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் டி.சரவணனின் கதையைப் படமாக்க உள்ளனர். இதற்கான அறிவிப்பு விழா கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திங்களன்று சென்னை வடபழநியில் உள்ள தமிழ் சினிமா கம்பெனி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.திரைக்கதை, வசனம், லொக்கேசன், நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் பூஜையும் விரைவில் நடைபெறும்… என்றார் தமிழ் சினிமா கம்பெனியின் சேர்மனான கஸாலி.தேர்ந்தெடுத்த எல்லாக் கதைகளையும் தமிழ் சினிமா கம்பெனி மட்டுமே தயாரிக்காமல், மற்ற தயாரிப்பாளர்களுக்கும் பரிந்துரைத்து புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தரவுள்ளது. அதோடு, முதல் பிரதி (First Copy) அடிப்படையிலும் படங்களைத் தயாரித்துக் கொடுக்குமாம்.
மொத்தத்தில் தமிழ் சினிமா கம்பெனி என்பது தமிழ்ப் படங்களுக்கு மட்டுமன்றி் அனைத்து மொழிகளுக்கும் ‘கதை வங்கி(Story Bank)’யாகவும் செயல்படவுள்ளது.

“நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கை தட்டல்கள் பெறும் வசனங்கள், சிறப்பான இயக்கம் இவை அமையப் பெற்றால் பெரும்பாலான சிறிய பட்ஜெட் படங்கள் உலகத் தரத்தோடு நல்ல லாபத்தையும், நல்ல பெயரையும் பெற்றுத் தரும். அந்த முயற்சியில் தமிழ் சினிமா கம்பெனி முன் ஏர் போலச் செயல்படும். அதற்கான ஆரம்பம்தான் இது” என்கிறார், தமிழ் சினிமா கம்பெனியின் முதன்மை ஆலோசகரும், தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரும், இயக்குநர் மற்றும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *