தேனி அல்லிநகரம் நகராட்சியின் அலட்சியப் போக்கால் ‘வயிறு கிழிந்த’ மெகா சைஸ் குப்பை தொட்டிகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் நாற்றமெடுத்து வருகிறது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33வது வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வார்டுகளில் குவியும் குப்பை நகராட்சி மூலம் அவ்வப்போது தள்ளுவண்டிகள், டிராக்டர்கள், லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நகரின் சுகாதாரம் பேணி காக்கப்படுகிறது. இது தவிர குடியிருப்பு மிகுந்த என்.ஆர்.டி., நகர், அல்லிநகரம், பாரஸ்ட் ரோடு பகுதிகளில் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்கள் அதிகளவு உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் குப்பை ‘குன்று’ போல் குவிந்து காணப்படும். குப்பையை சேகரிக்க ‘டம்பர் பிளேசர்’ எனப்படும் மெகா சைஸ் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுகள் பல கடந்ததால் மெகா சைஸ் குப்பை தொட்டிகள் ‘வயிறு கிழிந்து’ காணப்படுகிறது.
தொட்டியில் கொட்டப்படும் குப்பை அனைத்தும் வெளியே சிதறுவதால், துர்நாற்றம் தாங்காமல் பாதசாரிகள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி லாரிகள் மூலம் குப்பை எடுத்துச் சென்றால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ‘குப்பை’ அர்ச்சனை தான் நடக்கிறது. நகராட்சியின் அலட்சியப் போக்கை கண்டித்து சமூக ஆர்வலர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஆணையாளரிடம் மனு கொடுத்தும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல்’ கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது, என தேனி மக்கள் புலம்புகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் முரளீதரன் இந்த விஷயத்தில் தலையிட்டு, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.