• Mon. Dec 2nd, 2024

மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு தாயை பரிதவிக்க விட்ட மகன்கள்..,
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!

Byவிஷா

Jan 29, 2022

மதுரையில் சொத்தை அபகரித்துக் கொண்டு 75 வயதான மூதாட்டியை பரிதவிக்க விட்டு, வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தாய் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் மூதாட்டி லெட்சுமி (75). இவரது கணவர் சேதுராமன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவருக்குச் சொந்தமான வீட்டை விற்று தனது மகன்களான கேசவன், முருகவேல் ஆகிய இருவருக்கும் பணத்தை பிரித்து கொடுத்துவிட்டு 2 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் வைத்துள்ளார்.

இந்நிலையில் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை 2 மாதத்திற்கு முன்பு ஏ.டி.எம் கார்டு மூலம் அவரது மகன்கள் எடுத்துக் கொண்டதாகவும், தன்னிடம் இருந்த 10 சவரன் நகைகளையும் வாங்கிக் கொண்டதாகவும் மூதாட்டி கூறினார். கண் பார்வை குறைபாடு, வயது மூப்பு காரணமாக தனியாக வசித்து வந்த மூதாட்டி லெட்சுமி 1 மாதமாக தனது மூத்த மகன் கேசவன் வீட்டில் வசித்து வந்துள்ளார்,


இதையடுத்து மூதாட்டியின் மகனும் மருமகளும் உணவு வழங்காமல் மூதாட்டியை அடித்து துன்புறுத்தியதோடு வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார், அனைத்து விபரங்களையும் கேட்ட ஆட்சியர் மூதாட்டியை உடனடியாக முதியோர் இல்லத்தில் சேர்க்கவும், மூதாட்டியின் புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *