• Thu. Apr 25th, 2024

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதா..,
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை..!

Byவிஷா

Jan 29, 2022

தமிழகத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி முழு ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இரவு நேர ஊரடங்கு ரத்து, பள்ளிகள் திறப்பு என அனைத்தையும் ரத்து செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
“தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகமும் வரவேற்கிறது. அதேவேளையில், நியோ கோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என தகவல் வருகிறது.
நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கெனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளிகளை ஏன் திறக்க கூடாது என்ற கேள்வி எழக்கூடும்.


இதற்காகவே பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது தேர்தலுக்காகவே என எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் முடிந்த பின் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே, மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *