நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம். அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் அந்த மெகா ஸ்டார்?
1980 களின் கடைசியில் துவங்கி பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் நடித்த ‘ஆசை’ படத்தில் ஆட்டோ டிரைவர் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்த 4 ஆண்டுகளில் அஜித்தை வைத்து ‘வாலி’ படத்தை இயக்கினார். மிகப் பெரிய ஹிட்டான இந்த படம் எஸ்.ஜே.சூர்யாவை யாரென அடையாளம் காட்டியது. அதோடு அஜித்திற்கும் மிகப் பெரிய பாராட்டை பெற்று தந்தது.
அதன் பிறகு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கி, மெகா ஹிட் கொடுத்தார். இந்த படத்தை இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவரே இயக்கினார். பிறகு தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஹீரோ, கேரக்டர் ரோல், கெஸ்ட் ரோல்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தின் மூலம் வில்லன் கேரக்டரில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டார். லேட்டஸ்டாக சிம்புவின் மாநாடு படத்தில் தனுஷ்கோடி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அடுத்தபடியாக பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க போகிறாராம். தமிழ், இந்தி என இருமொழிகளில் இயக்கப்பட உள்ள இந்த படத்தின் மூலம் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாக போகிறார். இந்த படத்தை ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் இயக்க போகிறாராம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்தியில் Tera Yaar Hoon Mein என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். முன்பே முடிவு செய்யப்பட்ட இந்த படம், தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சட்டரீதியாக இந்த படத்தை எடுக்க உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் படத்தை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளனர்.
அமிதாப்பும் படத்தில் நடிக்க ஓகே சொல்ல, பட வேலைகள் தொடங்கிவிட்டனவாம்! அமிதாப் பச்சன் 1969 ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஆனால் தற்போது தான் தமிழில் முதல் முறையாக நடிக்க போகிறார். முதல் படத்திலேயே வேஷ்டி கட்டி, கிராமத்து கெட்அப்பில் நடிக்க போகிறார் என்பது கூடுதல் தகவல்.