சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் ‘சிவகுமாரின் சபதம்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றொரு படத்தின் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியது சத்யஜோதி நிறுவனம்.
அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘அன்பறிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு விற்பனை செய்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது.இந்நிலையில் இப்படம் நேரடி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு இன்று (15.12.21) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் தமிழா ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் கூறியிருப்பதாவது அன்பறிவு திரைப்படத்திற்காக டிஷ்னியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு திரைப்படத்தை மிகச்சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்லும், அதோடு உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதால் ஒடிடியில் வெளியிடுகிறோம்.
இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணியினை செய்துள்ளார். இயக்குனர் அஸ்வின் ராம் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். நம் மண் சார்ந்த கலாச்சாரம், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இந்தப் படத்தை குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்
சிவக்குமாரின் சபதம் வந்த சுவடே தெரியாமல் தோல்வியை தழுவியது போன்று “அன்பறிவு” தோல்வியடைந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதால் படத்தை ஓடிடிக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்கின்றனர் திரைப்பட வியாபாரிகள் மத்தியில்.