அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பா் மாதம் சிசிஐ ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்ததாக புகார். இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கடந்த மாா்ச் மாதம் ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனம் சிசிஐயிடம் புகார் அளித்தது.
இந்தப் புகாரை விசாரித்து வந்த சிசிஐ நேற்று அதிரடி உத்தரவில் பிறப்பித்தது. அதில், ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்றே செயல்பட்டுள்ளதன் மூலம், சில விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளது. இதையொட்டி அந்த நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.202 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஃபியூச்சர் குழும நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை வாங்கியது தொடர்பான நோக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஃபியூச்சர் குழும நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அளித்த அனுமதியையும் நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த 60 தினங்களுக்குள் விரிவான படிவத்தை அமேசான் சமர்ப்பிக்க வேண்டும் என வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.