• Wed. Dec 11th, 2024

பூலத்துாரில் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் தாலுகா கும்பரையூர் அடுத்துள்ள, சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, கும்பரையூர் அடுத்துள்ள சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயில் உள்ளது. இங்கு சன்னதிகளில் வீற்றிருக்கும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று (பிப். 20) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, பிப். 16ம் தேதி புதன்கிழமை கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. பிப்.18ம் தேதி காலை 9 மணிக்கு கைலாச வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளத்துடன் வான வேடிக்கை நடந்தது. தொடர்ந்து பல புண்ணிய தீர்த்தங்களுடன், கோடி தீர்த்தம் மற்றும் முளைப்பாரியுடன் மண்டுப்பாறையில் இருந்து புறப்பட்டு, சிவன் கோயில் யாகசாலை வந்தடைந்தது. அன்று மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாகபூஜை துவங்கியது. பிப்.19ம் தேதி காலை 8 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று (பிப். 20) காலை 8.10 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடந்தது. காலை 9 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மூல ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் திருப்பதியான் (எ) கோதண்டராமர் கோயில் அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தேனி அருகே போடி பகுதியில் வசிக்கும் எஜமான் பாண்டி முனீஸ்வரர் என்ற சிவபக்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பூலத்தூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மலை கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.