• Fri. Apr 26th, 2024

சிவனின் முதல் கோவில் என்றழைக்கப்படுவது… உத்திரகோசமங்கை ஆலயம்!

ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்த பிறகு பித்ரு தோஷத்தைப் போக்குவதற்காக தனது கையினால் மண்ணில் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார். இதனால் ராமேஸ்வரம் தான் மிகப்பழமையான சிவன் கோவில் என்றும் நடராஜர் முதன்முதலாக, நடனமாடியது சிதம்பரத்தில் தான். அதனால் சிதம்பரம் தான் மிகப் பழமையான கோவில் என்றும் பலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மையில் இந்த இரண்டு கோவில்களுக்கு முன்பாகவே மற்றொரு பிரசித்தி பெற்ற கோவில் கட்டப்பட்டு அங்கு ஏராளமான அதிசயங்களும் நிகழ்ந்துள்ளது.

சுமார் 8000 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த கோவில் இருந்துள்ளது. சைவ நூல்களில் முக்கியமானதாக கருதப்படும் திருவாசகத்தில் 38 இடங்களில் இந்த கோவிலை பற்றி மாணிக்கவாசகர் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிரசித்தி பெற்ற கோவிலின் பெயர் உத்திரகோசமங்கை.

கோவிலின் சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருஉத்திரகோசமங்கை! இங்கு தான் உலகின் முதல் சிவபெருமான் கோவில் அமைந்துள்ளது. சிதம்பர நடராஜர் சுவாமி முதன்முதலில் நடனமாடியது சிதம்பரம் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் உத்திரகோசமங்கை ஆலயத்தின் பள்ளியறையில் தான் முதன்முதலாக சிவபெருமான் நடனம் ஆடியுள்ளார். அதன் பின்னரே சிவபெருமான் சிதம்பரத்திற்கு சென்றதாக கல்வெட்டுகள் உள்ளன.. இதன் காரணமாக உத்திரகோசமங்கை ஊருக்கு ஆதி சிதம்பரம் என்ற மற்றொரு பெயரும் கிடைக்கப்பெற்றது.

உத்திரகோசமங்கையில் மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை, ஐந்தரை அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

திருஉத்திரகோசமங்கை பெயர் காரணம்:
இந்த பழமையான கோவில் அமைந்துள்ள ஊரின் பெயர் திருஉத்திரகோசமங்கை. உத்திரம் என்பது உபதேசம் கோசம் என்பது.. ரகசியம் மங்கை பார்வதிதேவியை குறிக்கிறது. அதாவது பிரணவ மந்திரத்தை பார்வதிதேவிக்கு சிவபெருமான் உபதேசித்தது தான் திருஉத்திரகோசமங்கை என்ற பெயர் வருவதற்கு காரணமாக அமைந்தது. நவகிரகங்கள் ஒன்பது என்று உருவாவதற்கு முன்பே இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மிகப் பழமையான ஆலயங்களில் கூட 9 நவகிரகங்கள் இருக்கும் ஆனால் இந்த உத்திரகோசமங்கை கோவிலில் சூரியன் செவ்வாய் சந்திரன் என்று மூன்று கிரகங்கள் மட்டுமே இருக்கிறது.

மற்ற கிரகங்கள் பகவான் பட்டத்தை பெறுவதற்கு முன்பே இந்த கோவில் கட்டப்பட்டு விட்டது என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால் இதுவரை இந்த கோவிலை யார் கட்டினார்கள் எப்போது கட்டினார்கள் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. மகாபாரதம் 5000 வருடங்கள் பழமையானது என்று கூறுவர்கள். ஆனால் அதற்கு முன்பே ராமாயண காலத்தில் இந்தக் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் சிவனின் அருளால் இந்த கோவிலில் தான் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றிய கதை கூட கல்வெட்டுக்களில் இருக்கிறது.

சிவபெருமானின் திருவிளையாடல்
மண்டோதரி தீவிரமான சிவ பக்தணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் வெகுகாலமாக திருமணம் செய்யாமல் சிவனை உத்திரகோசமங்கை ஆலயத்திற்கு வந்து பூஜித்து வந்துள்ளார். அதோடு சிவனை நோக்கி தவம் புரிந்துள்ளார். இதனால் மனம் உருகிய சிவபெருமான் திருஉத்திரகோசமங்கை அலாயத்திற்க்கு ரிஷிகள் அனைவரையும் அழைத்து மண்டோதரியின் விருப்பத்தை நான் நிறைவேற்ற போகிறேன்.

எனவே நான் தரும் இந்த வேதங்களை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் ராவணன் சிறந்த சிவ பக்தனா என்பதை சோதித்துப் பார்க்க முடிவு செய்து அவர் முன்பு குழந்தையாக தோன்றி அழுதுள்ளார். ராவணன் குழந்தை அழுவதைக் பார்த்து கையில் எடுக்க முயற்சித்தபோது சிவபெருமான் நெருப்பாக மாறி இருக்கிறார். இதனால் பிரபஞ்சத்திற்கு கீழே எல்லா திசைகளிலும் நெருப்பு சூழ்ந்துள்ளது.

இதனால் சிவபெருமானுக்கு ஆபத்து நேர்ந்து விட்டது என்று நினைத்த ரிஷிகள் வேதங்களை பாதுகாப்பதை பற்றி யோசிக்காமல் சிவன் இல்லாமல் எங்களாலும் வாழ முடியாது என்று நெருப்பில் விழுந்து உயிர் துறந்தனர். ஆனால் மாணிக்கவாசகர் மட்டும் சிவபெருமானுக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. இது அவரின் திருவிளையாடல் என்று உறுதியோடு சிவபெருமான் கொடுத்துச் சென்ற வேதங்களை பாதுகாப்பாக வைத்திருந்தார். ஆயிரம் ரிஷிகள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்து மோட்சம் பெற்றதால் அந்த இடத்தில் அக்னி தீர்த்தம் உருவாகியுள்ளது. அந்த குளத்தில் குளித்தால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தாழம்பூவும் பிரம்மாவும்
எந்த கோவிலிலும் சிவபெருமானுக்கு தாழம்பூவை வைத்து பூஜை செய்ய மாட்டார்கள். ஆனால் திருஉத்திரகோசமங்கை ஆலயத்தில் மட்டும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜை நடக்கிறது. இதற்கு ஒரு கதை இருக்கிறது. பரம்பொருள் சிவபெருமானின் அடி-முடியைக் யாராலும் பார்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று ஒரு போட்டி வந்தது. இதனால் சிவபெருமான் தனது அடி முடியை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர் தான் பெரியவர் என்று கூறிவிடுகிறார்.

இதனால் விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பாதாளலோகம் வரை சென்றும் சிவனின் அடியை பார்க்க முடியாமல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அதேநேரம் பிரம்ம தேவர் அன்னப் பறவையாக மாறி சிவனின் முடியை தேடி மேலே பறந்து சென்றார். ஆனால் அவரால் சிவனின் முடியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத பிரம்ம தேவர் சிவபெருமானின் தலையில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவிடம் சென்று பொய் சாட்சி கூற அழைத்துள்ளார். தாழம்பூவும் சம்மதம் தெரிவித்து பிரம்மா சிவபெருமானின் முடியைப் பார்த்து விட்டார் என்று பொய் கூறியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் பிரம்ம தேவனுக்கு இனி ஆலயங்கள் கட்டக்கூடாது என்றும் தனக்கான பூஜைகளில் தாழம்பூவை வைக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். தங்களின் தவறை உணர்ந்த பிரம்மாவும், தாழம்பூவும் உத்திரகோசமங்கை ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் தவம் புரிந்துள்ளனர். இதனால் மனம் இறங்கிய சிவபெருமான் இருவருக்கும் மன்னிப்பு வழங்கியுள்ளார். இதனால்தான் தாழம்பூவை இந்த கோவிலில் மட்டும் பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள். அதோடு அதன் பிறகுதான் பிரம்ம தேவருக்கு கோவில் கட்டி வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தன காட்சியின் பின்னணி
உத்திரகோசமங்கை ஆலயத்திலுள்ள நடராஜருக்கு வருடத்தில் ஒரே ஒரு முறைதான் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் சந்தனம் பூசி நடராஜர் காட்சி அளிப்பார். மத்தளம் வாசித்தால் மரகதத்திற்கு சேதம் ஏற்படும் என்பதற்காக மேளதாளங்கள் வாசிக்கும்போது சிலைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று எப்போதும் சந்தனம் பூசி தான் நடராஜர் சிலை இருக்கும். வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்தையநாள் சந்தனம் முற்றிலுமாக கலைக்கப்பட்டு பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

அப்போது சிலையில் இருந்து எடுக்கப்பட்ட சந்தனத்தை தான் மக்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர். இந்த கோவிலில் சிவபெருமானை தேவி பார்வதி தினமும் வழிபடுவதாக கூறப்படுகிறது. மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் உருவமாக காட்சி கொடுத்தது இந்த ஆலயத்தில் வைத்து தான். இங்கு மாணிக்கவாசகர் லிங்க வடிவத்தில் காட்சி கொடுக்கிறார். இந்தத் தலத்தில் வேத வியாசர், காகபுஜண்டர், மிருகண்ட முனிவர், வாணாசுரன், மாயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்டு அவரது ஆசியைப் பெற்றுச் சென்றனர்.

இங்குள்ள பஞ்சலோக நடராஜர் சிலை மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கும். அதாவது வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும் இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலை படையாய் இருக்கும். இதனால் நடராஜர் சிலையும் மிகத் தொன்மை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். இந்த கோவிலின் வாசலில் முருகரும் விநாயகரும் இடம்மாறி அமர்ந்திருப்பார்கள். அதில் முருகனுக்கு யானை வாகனமாக அமைந்திருக்கும் .

இந்தக் கோவிலில் 11 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அதோடு பிரகாரத்தை சுற்றி வலம் வரும் போது மகாலட்சுமியையும் தரிசிக்க முடியும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உத்திரகோசமங்கை ஆலயத்திற்கு சென்று வந்தால் திருமண தோசம் நீங்கும் என்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *