

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் இல்லை என கூறி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாக நடிகர் ஷாருக்கான் மகன் கைது சம்பவம் இருந்தது.போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. கைதுக்கான காரணங்கள்குறித்து ஆதரவாகவும்,எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, மும்பை – கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியது.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, போதிய ஆதாரம் இல்லாததால், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

