

என் பெயரைக் கேட்டாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதைக் கண்டித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல நாங்கள். ஏனெனில், நாங்கள் மக்கள் பிரச்சினைகளைக் கேட்க வந்தவர்கள், அவற்றைத் தீர்க்க வந்தவர்கள். அதற்காகத்தான் 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சிகளுக்காகப் போராடி வருகிறது.
ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். இன்று நாம் வளர்ந்துவிட்டதைக் கண்டு அனைத்து கட்சிகளும்
பொறாமைப்படுகின்றன. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரைக் கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றார்.

