நெல்லையில் எஸ்.என்.ஹை ரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ள நிலையில், 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு படித்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகுதியில்லாத பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அதிகாரிகள் முறையாக பரிசோதிக்காமல் விட்டது ஏனென்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விபத்துக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. காவல்துறை தரப்பிலும் இதுகுறித்த விசாரணை தொடங்கியிருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேரில் பள்ளிக்கட்டடத்தை தற்போது பார்வையிட்டுள்ளார்.
தகவலறிந்து பெற்றோர் பலரும் நேரடியாக வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.