1876 பிப்., 20ல் ராமசாமி – அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு மகனாக ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் பிறந்தவர் நமச்சிவாயம். பள்ளியிலேயே நல்வழி, நன்னெறி, நீதி நெறி விளக்கம், விவேக சிந்தாமணி உள்ளிட்ட நுால்களை கற்றார். 16 வயதில், சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.அங்கிருந்து மயிலாப்பூருக்கு நடந்தே சென்று, 12 ஆண்டுகள் சண்முகம் பிள்ளையிடம் இலக்கணம் கற்றார். ஒவ்வொரு கிருத்திகைக்கும், திருத்தணி சென்று வழிபடும் அளவுக்கு முருக பக்தர்.ராணிமேரி கல்லுாரி துவக்கப்பட்ட போது, தமிழ் பண்டிதராக சேர்ந்தார். பின், மாநிலக் கல்லுாரியில் பணியாற்றினார். சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, நீதிபதிகள் பி.எஸ்.கைலாசம், அழகிரிசாமி, சென்னை மாநகர முன்னாள் மேயர் எஸ்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அழகேசன் உள்ளிட்டோர் இவரின் மாணவர்கள்.பல்வேறு இலக்கண, நாடகம், பழந்தமிழ் நுால்களுக்கு உரை எழுதியுள்ளார். ‘நல்லாசிரியன்’ என்ற இதழையும் நடத்தியுள்ளார். தமிழ் இலக்கண அறிஞர் நமச்சிவாயம் நினைவு தினம் இன்று..!