• Sat. Apr 20th, 2024

நாளை சத்யாகிரக போராட்டம்.. காங்கிரஸ் அறிவிப்பு…

Byகாயத்ரி

Jul 25, 2022

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கியது.

இதில் முறைக்கேடு நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ந் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சோனியாகாந்தியுடன் வந்திருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் நாளை (26-ந்தேதி) விசாரணை ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாளை மத்திய அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகும்போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் அகில இந்திய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *