• Fri. Mar 29th, 2024

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000..! விண்ணப்பிப்பது எப்படி..?

ByA.Tamilselvan

Mar 1, 2023

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ஆம் ஆண்டு 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் மூலம் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். அதேபோல இந்த உதவித் தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை மாணவரிகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். இவர்களின் உயர்கல்வி மற்றும் பராமரிப்பு தேவைகளின் போது இந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித் தொகையைப் பெற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறந்த பெற்றோரின் இறப்பு சான்றிதழ், உடற்கூறு சான்று, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவற்றோடு இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *