• Sat. Apr 20th, 2024

செல்போன் கடைகளில் கொள்ளை.. அதன் பின்ன நடந்த தரமான சம்பவம்!

By

Sep 4, 2021 ,

புளியங்குடியில் செல்போன் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை புளியக்குடி போலீசார் 24 மணி நேரத்துக்குள் வலை வீசி பிடித்துள்ளனர்.

புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு மேல் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் அதன் உதிரி பாகங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிவகிரி தாலுகா மேட்டுப்பட்டி சேர்ந்த முத்துசாமி என்பவரது செல்போன் கடையில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் ரொக்கப் பணமாக 11 ஆயிரம் ரூபாயையும், புளியங்குடி சிதம்பர பேரி ஓடை தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரது செல்போன் கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் 3 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முத்துச்சாமி மற்றும் ரிசல் முகமது கொடுத்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் புளியங்குடி உதவி காவல் ஆய்வாளர் பாரத் லிங்கம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தீவிரமாக தேடும் படலத்தை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடியதில் சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி, ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகரைச் சேர்ந்த சுகுமாரன், மதுரை தெற்கு அரசரடி விராட்டிபத்து மேலத்தெருவைச் சேர்ந்த சிவசங்கர் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரையிலிருந்து மினி லாரி மூலம் திருநெல்வேலி பாவூர்சத்திரம் தென்காசி ஆகிய பகுதிகளுக்கு சிப்ஸ் இறக்கிவிட்டு கடையநல்லூரில் திருட முயற்சித்ததாகவும், ஆனால் அங்கு போலீசார் ரோந்து பணியில் இருந்ததால் புளியங்குடிக்கு வந்தததாகவும் தெரிவித்துள்ளனர். பூலித்தேவர் பிறந்தநாளில் ஊரடங்கு பணிக்காக போலீசார் சென்றதால், கண்காணிப்பு குறைவாக இருந்ததை நோட்டமிட்டே கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தென்காசி செய்தியாளர் – ஜெபராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *