கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி சாலைகள் பக்தர்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் புனித நீராடவும், திதி தர்பண பூஜை செய்யவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் வரும் 6ம் தேதி சர்வ அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிய வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 6ம் தேதி அன்று அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.