

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்கே செல்வமணி தலைமையில் புதுவசந்தம் என்ற ஓர் அணியும், கே பாக்யராஜ் தலைமையில் இமயம் என்ற ஓர் அணியும் போட்டியிடுகிறது.
சென்னையில் நேற்று இமயம் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ் பேசுகையில் செல்வமணியை குறிப்பிட்டு, நீ எடுத்த படங்கள் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்களை நீதான் எடுத்தாய் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. மேலும் கொரோனா காலத்தில் உதவி செய்ததாக அவர் பொய் கூறிவருகிறார். இயக்குநர் மணிரத்னம், பூமிகா அறக்கட்டளை தான் உதவியது என்றும் கூறிய பாக்யராஜ், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இதற்கு ஆர் கே செல்வமணியின் அணி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியை சேர்ந்தவர்கள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் திறந்த மடல் ஒன்றில் பாக்யராஜை கடுமையாக விமர்சித்துள்ளனர். முக்கியமாக பாக்யராஜ் அளித்திருக்கும் வாக்குறுதிகளை பொய்யாக தரப்பட்ட வாக்குறுதிகள் என கடுமையாக சாடியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட இயக்குநர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வு ஊதியம் தருவதாக கே பாக்யராஜ் வாக்குறுதி அளித்திருந்தார். “நான்கு வருடங்களுக்கு மேலாக எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிற நீங்கள் இதுவரை ஒரே ஒரு ஜீவனுக்கு கூட பென்ஷன் வழங்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி எங்கள் சங்கத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் பென்ஷன் தருவீர்கள்” என்று கேட்டுள்ளனர்.
இயக்குநர் சங்கத்தில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 400 பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 8 லட்ச ரூபாய் தேவைப்படும். அப்படியானால் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். வருடம் ஒரு கோடி ரூபாய் வருவது என்றால் வங்கியில் டெபாசிட் தொகை 16 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வளவு பணம் இயக்குனர் சங்கத்தில் எங்கு உள்ளது என்று. பாக்யராஜ் பொய்யான வாக்குறுதி தந்து ஏமாற்றுகிறார்.
அதுபோல் நான்கு வருடமாக எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் ஒரு பைசா கூட நீங்கள் நிதி திரட்டியது இல்லை. பிறகு எப்படி 16 கோடி ரூபாய் திரட்ட போகிறீர்கள். முத்தாய்ப்பாக, சினிமாவில் மட்டும் தான் கதை வெல்லும்.. திரைக்கதை வெல்லும்.. ஆனால் சங்கத்தில் உண்மை மட்டுமே வெல்லும். பதவிக்காக பொய் சொல்லி இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
